வில்லு வண்டி


வயலும், வயல் சார் வாழ்வும்..
ஏப்ரல்23, 2010, 12:05 பிப
Filed under: Uncategorized

வயலும் வயல்சார் வாழ்வும்..

யல்ல 7 நாளைக்கிமுன்ன பாவுன வித அம்புட்டும் முளைச்சுமூணுஇலை விட்டுருந்திச்சு.லேசா கொஞ்சம் தண்ணிபாய்ச்சிட்டு வரலாம்ணு வந்த இட்த்துல பயிரப்பாத்ததும் அப்படியே வரப்புல உக்காந்தவந்தான். இந்த விதைப்பயிரு முளைச்சு, அத பறிச்சு நட்டு, அது வளர்ந்து நெல் மணியா காய்ச்சு தொங்கற வரைக்கும், எனக்கும் அதுக்குமுள்ள உறவு அது ரொம்ப மென்மையானது. தெனசரி வந்து பயிர பார்த்து அதுகளோட பேசி உற்சாகப்படுத்தி, உற்சாகப்பட்டு மனசு நெறஞ்சு வீட்டுக்குத் திரும்பி போறது ரொம்ப நல்லாருக்கும்.பயிர்கள்னா அதும் உயிர்தானே, என்ன அதோட ஆயுள் நம்ம ஆயுளுக்கு உதவுது.

நெல் அறுவடை செய்யும்போது வருத்தம் வாரதில்ல.முதல் கதிர ஒரு நல்ல நாள் பார்த்து அறுத்து எடுத்து வீட்டுக்கு கொண்டுபோயி, சாமி முன்னால வச்சு, வட பாயாசமெல்லாம் படைச்சு கும்புட்டு, அந்த கதிரால ஒரு விசிறி மாதிரி பண்ணி உத்திரத்துல தொங்கவிடுவோம்.மீதி நெல்ல ஒரு பானயில போட்டு வைப்போம். பல வருசமா இப்படி கொண்டுவந்த நாள் நெல்ல அதில கொட்டிவைச்சிருப்போம். அத குதிருண்ணு சொல்லுவோம். எப்பவும் அந்துப் பூச்சிக நெறஞ்சுருக்கிற அந்தக் குதிர திறந்தா சில்லுண்ணு 1000 பூச்சிக மொத்தமா மேல பறக்கும். அதுல ஒண்ணு ரெண்டு நம்ம முகத்துல, கை கால்ல உக்கார்றது கூச்சமாகவும், எரிச்சலாகவும் இருக்கும்.

முதல் அறுவடை முடிஞ்சு நெல் வீடு வந்த நாள் ரொம்ப சந்தோசமாயிருக்கும். ஒவ்வொரு வேர்வை துளியும் நெல் மணியா மாறி.. அப்பப்பா. வீடு நெறைய ஒரு வாசன பரவி நிக்கும். அற்புதமான வாசன. ராத்திரி நேரத்துல தூக்கத்துல அந்த வாசன நெறைஞ்ச காடும், உயிர்களும், ரீங்கரிக்கும் பூச்சிகளும் கனவா வரும். நல்ல காத்து நெறஞ்ச காடு. வீடும் கூட ஒரு காடு மாதிரியே தோன்றும். சந்தோசம் நிறஞ்ச காடு, சகோதர வாஞ்சயுள்ள மிருகங்கள் நிரம்புன காடு. இப்போ இந்த வாசனய கொஞ்சம் கொஞ்சம இழந்துட்டு வாறோம்கிறது ரொம்ப வருத்தமான சேதிதான். நெல் வாசன மாறி டீசல், பெட்ரோல் வாசன கூடிப்போன இடமா இந்த வயலுக மாறிக்கிட்டே வர்றத வருத்த்த்தோட பாத்துட்டிருக்கேன்.பணம் தேடி ஓடிட்டே இருக்கிற மனுஷனுக்கு ஆசுவாசம உக்காந்து யோசிக்க எங்க நேரமிருக்கு. 50 வருஷமா நெல் வெள்ஞ்சு சம்பாதிச்ச பணம் 1 நாள்ல வீட்டுமனைக்கு வித்தா கிடைக்குது. அப்புறமென்ன பாம்பு, தவளை, அணில்னு எல்லாத்தியும் அடிச்சு தொறத்திட்டு புதுசா போட்ட் மெட்டல் ரோட்டுல உக்காந்துகிட்டு, போற வார வாகனத்தோட டீசல் புகய சம்முன்னு இழுத்து விட்டுட்டிருக்காங்க பணம் பண்றவங்க.. பாப்போம் என்ன நடக்கப்போவுதுண்ணு..

குருதி வழியும் நிலங்களிலெழும்புகின்றன

மனித சமாதிகள். திசைமாறும் வழித்தடங்களில்

நீண்டமூக்கால் கொக்குகள்கிழித்த கோடுகள்

கிடைமட்டமாய் கறுப்பாய்

போன்சாய் தொட்டிகளில் உரமாகின்றன சிற்றுயிர்களின்

அழுகுரல்கள். சுற்றுச்சுவர்களிலமர்ந்து அழிவின்

பாடலைப்பதிவு செய்கின்றன காகங்கள்

மஞ்சள்கண் பூனைகளின் இசை குறுதியாய் வழிந்து

நிறைகிறது வீதியெங்கும். அரிசி இறக்குமதிக்கான

ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிவிப்பு வானொலியில்